அம்பை அருகே ரேஷன் கடையில் ரூ.1000 பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி சாவு வெயில் கொடுமையால் சுருண்டு விழுந்த பரிதாபம்

அம்பை அருகே ரேஷன் கடையில் ரூ.1000 பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி வெயில் கொடுமையால் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-09 23:00 GMT
அம்பை, 


நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா மணிமுத்தாறு அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரம்மாச்சி (வயது 85). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களில் 2-வது மகன் முத்துப்பாண்டி என்பவர் தவிர மற்ற அனைவரும் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முத்துப்பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உள்ளூரில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் அருகே பிரம்மாச்சி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரம்மாச்சி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் முத்துப்பாண்டி மற்றும் அவருடைய மனைவி முத்துமாரி ஆகியோர் அங்குள்ள டாக்டர் வீட்டுக்கு பிரம்மாச்சியை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும் அனைவரும் வீட்டுக்கு திரும்பிவிட்டனர்.

பின்னர் காலையில் வீட்டில் வழக்கம்போல் பணிகளை பிரம்மாச்சி செய்து வந்தார். மதியம் 12 மணி அளவில் ஏர்மாள்புரம் அம்மன் கோவில் அருகில் உள்ள ரேஷன் கடையில் 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு வாங்குவதற்காக பிரம்மாச்சி ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் ஏராளமானோர் வரிசையில் காத்து நின்றனர். அவர்களுடன் பிரம்மாச்சியும் வரிசையில் நின்றார்.

அப்போது கடுமையான வெயில் அடித்தது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரம்மாச்சி வரிசையில் நின்றார். அப்போது திடீரென அவர் சுருண்டு விழுந்தார். இதனால் வரிசையில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், பிரம்மாச்சி முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் தான் அவர் இறந்து போனது தெரியவந்தது.

இதுபற்றி அவரது மகன் முத்துப்பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துப்பாண்டியின் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டி ஓடி வந்தனர். பிரம்மாச்சியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். பின்னர் அங்கிருந்து பிரம்மாச்சியின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். ரூ.1000 பொங்கல் பரிசு வாங்க வந்த இடத்தில் மூதாட்டி வெயில் கொடுமையால் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்