அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 337 பேர் கைது
திருவண்ணாமலை, வந்தவாசி, சேத்துப் பட்டில் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 337 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
2-வது நாளாக நேற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்தவர் நேற்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் தொ.மு.ச. மாநில பேரவை செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசி பழைய பஸ்நிலையம் முன்பாக தொ.மு.ச. மண்டல பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதேபோன்று தேரடியில் மறியல் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் அஸ்கர்அலி உள்பட 14 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. ஐ.என்.டி.யு.சி. திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் முருகன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை, சேத்துப்பட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்க இணை செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் மறியல் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மன் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.