காவல்துறை சான்றிதழ்களை இணையதளத்தில் பெறும் வசதி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
காவல்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வேலூரில், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார்.;
வேலூர்,
தமிழக காவல்துறையில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான விபரம் சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பார்ஸ்போர்ட்டு மற்றும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு நன்னடத்தை சான்றிதழ் பெறுவது அவசியமான ஒன்றாகும்.
இந்த சேவையில் பொதுமக்களின் வீண் அலைச்சலை தடுக்க முதன் முறையாக இணையதளம் மூலம் நன்னடைத்தை சான்றிதழை பெறும் வசதியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு சேவை உள்ளிட்ட 4 விதமான சேவைகளை இணையதளம் மூலம் வழங்கும் புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவல்துறையின் இந்த சேவைகளை பெற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gon.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் கடிதம் அல்லது அடையாள அட்டை போன்றவற்றை இணைக்க வேண்டும். ஒருவர் யாருடைய விபரத்தை கேட்டும் விண்ணப்பிக்கலாம். காவல்துறையினர் விசாரணைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா? என விசாரிப்பார்கள். ஒருவேளை ஒப்புதல் பெறவில்லை என்றால் விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படாது. இந்த புதிய நடைமுறையால் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அனைத்து விபரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
விண்ணப்பித்த நபரின் செல்போனுக்கு 4 இலக்க எண்கள் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சேவையை பெற தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஆயிரம் ரூபாயும் இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் வழியாக சேவையை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.