காரைக்காலில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; அரசு ஊழியர்கள் 260 பேர் கைது

காரைக்காலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் 260 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-08 23:22 GMT
காரைக்கால்,

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், உள்ளாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் நேற்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாளன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி, புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம், புதுச்சேரி மின்திறல் குழுமம், அங்கன்வாடி, அனைத்து தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், உள்ளாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் பாரதியார் சாலை வழியாக ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் அரசு ஊழியர்கள் 260 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்