வர்த்தக உரிமத்தை புதுப்பிக்காவிட்டால் ஜப்தி நடவடிக்கை; நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
வர்த்தக உரிமத்தை புதுப்பிக்காவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உழவர்கரை, புதுச்சேரி நகராட்சிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுவை நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கி வருகின்றன. இது நகராட்சிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே நகராட்சியின் உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் வியாபாரம் செய்பவர்கள் வருகிற 31–ந்தேதிக்குள் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சியின் வருவாய் பிரிவினை அணுகி அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வர்த்தக உரிமம் பெற வேண்டும், ஏற்கனவே உரிமம் பெற்று இருப்பவர்கள் அதை புதுப்பிக்கவேண்டும். தவறும் பட்சத்தில் வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சியால் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுவை நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி, வீட்டுவரி செலுத்த வேண்டும். புதுச்சேரி அரசு, உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்திற்கு பழைய வரிவிதிப்பு முறையை மாற்றி புதிய பாட்னா சுயமதிப்பீட்டு சொத்து, வீட்டு வரி முறையினை 2005–10ல் அமல் செய்தது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் சொத்து, வீட்டுவரியினை ஆய்வு செய்து பொது மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். அவ்வாறு வீட்டுவரி மறுசீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதால் புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டிடத்தில் கூடுதல் தளங்கள் கட்டி இருந்தால் 15 தினங்களுக்குள் புதுச்சேரி நகராட்சிக்கு சுயமதிப்பீடு சொத்து, வீட்டுவரிக்கான படிவத்தினை சமர்ப்பித்து மாற்றியமைக்கப்பட்ட வரியினை கணக்கிட்டு சொத்து, வீட்டுவரியினை செலுத்த வேண்டும்.
புதுச்சேரி நகராட்சி எல்லைக்குப்பட்ட உள்ள சொத்துவரி, வீட்டுவரி செலுத்தும் வசூல் மையங்கள், அதிகாரிகள் விவரம் வருமாறு:–
முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதி வீட்டுவரி வசூல் மையம்– வரி வசூலிப்பாளர்கள் இளங்கோ, மாறன். கம்பன் கலையரங்கம்– வருவாய் ஆய்வாளர் குணசேகரன், வரி வசூலிப்பாளர்கள் ஆதிமூலம், செம்மணகிரி, பாலு. நெல்லித்தோப்பு வீட்டுவரி வசூல் மையம்– வரி வசூலிப்பாளர் கண்ணபிரான், குமரேசன், முதலியார்பேட்டை மேரி வரி வசூல் மையம்– வரி வசூலிப்பாளர்கள் ராஜவேல், மூர்த்தி.
சொத்துக்கான ஆவண பத்திர நகல், காலிமனை வரி செலுத்திய ரசீது நகல், சாலை அபிவிருத்தி தொகை செலுத்தியதற்கான ரசீது நகல், மின், குடிநீர் இணைப்பு வரி ரசீது நகல் ஆகிய ஆவணங்களை இணைக்கவேண்டும்.
மேலும் நகராட்சி எல்லைக்குப்பட்ட பகுதியில் புதிதாக அமைந்துள்ள நகர் மற்றும் மனை பிரிவுள்ள மனை பகுதிக்கு சாலை அபிவிருத்தி தொகை மற்றும் காலிமனை வரியினை செலுத்த புதுவை நகராட்சி துணை நில அளவையர் சகாயராஜை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.