தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம், மாவட்டம் முழுவதும் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின

தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் மாவட்டம் முழுவதும் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. சாலை மறியலில் ஈடுபட்ட 801 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-01-08 22:45 GMT
திண்டுக்கல், 

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையங்களில் பல ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை.

இதன் காரணமாக மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வங்கிகளை பொறுத்தவரை ஒருசில வங்கிகளில் மட்டுமே பெரும்பான்மையான ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் அந்த வங்கிகளில் மட்டுமே பணிகள் பாதித்தன. இதர வங்கிகளில் குறைவான எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலைக்கு வந்தனர்.

எனினும் சுமார் ரூ.60 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள், அலுவலர்கள் குறைந்த அளவிலேயே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதனால் 92 சதவீதத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகள், பஸ் நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ரெயில் நிலையங்கள், முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் பெரும்பாலான ஆட்டோக்கள், வேன்கள், சரக்கு வாகனங்களும் இயங்கின. மேலும் ஆசிரியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். எனினும், பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் தொழிற்சங்கத்தினர் நடத்திய வேலைநிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

இதற்கிடையே திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தாடிக்கொம்பு சாலையில் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் திரண்டனர். பின்னர் தொழிலாளர் நல அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில்-திண்டுக்கல் சாலையில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேடசந்தூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் துணைத்தலைவர் நாகராஜ் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர். நத்தத்தில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மறியல் நடந்தது. இதற்கு தாலுகா பொறுப்பாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி பஸ்நிறுத்தத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் மறியல் நடந்தது. இதில் தொழிற்சங்கங்களை சேர்ந்த 66 பேரை போலீசார் கைது செய்தனர். குஜிலியம்பாறையில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம் தலைமையிலான தொழிற்சங்கத்தினர் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் பஸ்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்சத்திரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதுதொடர்பாக 24 பெண்கள் உள்பட 86 பேரை போலீசார் கைது செய்தனர். பழனி அருகே ஆயக்குடியில் பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் களஞ்சியம் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்தியஅரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

இதையடுத்து ஆயக்குடி போலீசார் மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர். நிலக்கோட்டையில், தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு சங்க ஒன்றிய செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இந்த மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 148 பெண்கள் உள்பட மொத்தம் 801 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நகர தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

அதேபோல் திண்டுக்கல்-பழனி சாலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கிளை செயலாளர் அருளானந்தம் தலைமையில் ஏராளமான ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பழனியில், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யூ. சங்க இணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ. இணைப்புகுழு தலைவர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். திண்டுக்கல் நகரில் மொத்தம் 42 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் 2 ஆயிரம் தொழிலாளர்களும் நேற்று வேலைக்கு செல்லவில்லை. இதனால் தோல் பதனிடும் பணிகள் முடங்கின. மேலும் பேகம்பூரில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநில தலைவர் பசீர்அகமது, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன், தோல் பதனிடும் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்