ராமநாதபுரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 4 பேர் சிக்கினர்

ராமநாதபுரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 4 பேர் வனத்துறையினரிடம் சிக்கினர்.;

Update: 2019-01-08 22:33 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வனத்துறை சார்பில் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனவர் மதிவாணன், வன காப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டிய பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது கொழுவூர் பகுதியில் பறவைகளை சிலர் வேட்டையாடி கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மர்ம நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி, முனியாண்டி மகன் கோட்டை, கணேசன் மகன் புல்லாணி, செல்லையா மகன் முருகன் என தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனையிட்டபோது 6 கொக்குகளை பிடித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பறவைகளையும், அதை வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பிச்சுருள், வில்லு, கவட்டை மற்றும் மொபட் ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறவைகளை வேட்டையாடிய 4 பேருக்கும் வனத்துறை சார்பில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனி பறவைகளை வேட்டையாடினால் சிறைதண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவைகளை வேட்டையாடி கிராம பகுதிகளிலும், நகரின் ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் இந்த செயலை முழுமையாக தடுத்து நிறுத்தி அழிந்துவரும் பறவை இனங்களை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்