சிவகங்கையில் பயிற்சி முடித்த இந்தோ– திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை வழியனுப்பும் விழா; கண்கவரும் சாகச நிகழ்ச்சி

சிவகங்கை இலுப்பக்குடி இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை வழியனுப்பும் விழா நேற்று நடந்தது. இதில் கண்கவரும் சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.;

Update: 2019-01-08 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை அருகே உள்ள இலுப்பக்குடியில் இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லை பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். அவர்கள் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த மையத்தில் முதல் முறையாக 25 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கடந்த 16 வாரங்களாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் பயிற்சி முடித்த 25 அதிகாரிகளும் ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், அரியானா, நாகலாந்து, அசாம், இமாசலபிரதேசம், மேகாலயா, மத்தியபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியில் சேர உள்ளனர்.

பயிற்சியை முடித்த அதிகாரிகளை இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. டி.ஐ.ஜி ஆஸ்டின் ஈபன் தலைமை தாங்கினார். இயக்குனர் ஜெனரல் சுர்ஜித்சிங் தேஜ்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். மேலும் சாகச நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும் பரிசு வழங்கினார்.

முன்னதாக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அணி வகுப்பு நடைபெற்றது. தேசியக் கொடியை முன்னிறுத்தி அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர், டி.ஐ.ஜி. ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

முன்னதாக கண்கவரும் சாகச நிகழ்ச்சியாக கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்திற்குள் சாகசம் செய்தல், துப்பாக்கிகளை கையாளும் முறை ஆகியவையும், நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதை இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவ–மாணவிகள், பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்