தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் சமூக வலைத்தளத்தில் பிரசாரம் செய்வதை எப்படி தடுக்கலாம்? தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி
தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் சமூக வலைத்தளத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதை தடுக்க என்ன செய்யலாம்? என மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
சமீபகாலமாக அரசியல் கட்சியினர் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது அதிகரித்து உள்ளது. இதில் அவர்கள் தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகும் கூட சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதை ஒழுங்குப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை.
இந்தநிலையில், இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில், தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் தற்போது அவர்கள் எந்த கட்டுபாடும் இன்றி சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இது வாக்காளர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
தேர்தல் ஆணையத்திடம் விளக்கம்
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் பிரசாரம் மற்றும் விளம்பரம் செய்வதை தடுக்க என்ன செய்யலாம்? என மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.