சாலையில் நடந்து சென்றவரிடம் தங்க சங்கிலி அபேஸ் வாலிபர் பிடிபட்டார்

சாலையில் நடந்து சென்றவரிடம் நைசாக பேச்சு கொடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-08 21:26 GMT
மும்பை,

தென்மும்பை பகுதியை சேர்ந்தவர் உதய் சந்தோர்கர். சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்தார். நண்பர் போல பேசி பழகிய அவர், உதய் சந்தோர்கர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியின் வடிவமைப்பை பார்த்து பாராட்டினார். பின்னர் அந்த வாலிபர் அந்த தங்க சங்கிலியை பார்த்து விட்டு தருவதாக கேட்டார். உடனே உதய் சந்தோர்கர் தங்க சங்கிலியை பார்ப்பதற்காக கழற்றி கொடுத்தார்.

தங்கச்சங்கிலியை வாங்கியதும் அந்த வாலிபர் சைக்கிளில் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றார். இதை சற்றும் எதிர்பாராத உதய் சந்தோர்கர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரை பிடிக்க விரட்டி சென்றார். ஆனால் அவர் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

அந்த தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுபற்றி அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் நூதன முறையில் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற அந்த வாலிபரின் உருவத்தை கொண்டு வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த வாலிபர் பைகுல்லாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் கிரன் ரமேஷ் பூட்டியா (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கில்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்