நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம்: மைசூருவில் அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை

மைசூருவில் நடந்த முழுஅடைப்பு போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.;

Update: 2019-01-08 23:15 GMT
மைசூரு,

அகில இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய போராட்டம் நடந்தது. இதையொட்டி மைசூருவிலும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

நாடாளுமன்றத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் என பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதேபோல் கர்நாடகத்திலும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். திட்டமிட்டபடி நேற்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அதேபோல் கர்நாடகத்திலும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

மைசூருவில் முழுஅடைப்பு போராட்டம்

இதனால் கர்நாடகத்தில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் என எந்த பஸ்களும் ஓடவில்லை. இதேபோல் மைசூருவிலும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மைசூருவில் தனியார் பஸ்கள் ஓடவில்லை.

அரசு பஸ்கள் காலையில் ஓரளவுக்கு இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் அதிக அளவில் இல்லாததால் பஸ்கள் வெறிச்சோடின. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

பிரமாண்ட பேரணி

போராட்டத்தையொட்டி மைசூரு ரெயில் நிலையம் அருகே உள்ள ஜே.கே. மைதானத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இதில் மத்திய அரசு ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர், வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினரும், தொழிலாளர்கள் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் மைசூரு இர்வின் ரோடு வழியாக பிரமாண்ட பேரணி நடத்தினர். பேரணியின்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது

இந்த பேரணி மைசூரு டவுன் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன மாநாடு நடந்தது. பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு பஸ்கள் இயக்கப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த போராட்டத்தால் மைசூருவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மைசூருவுக்கு சுற்றுலா வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இன்றும் தொடரும்..

ஓரளவுக்கு ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஆகியவை இயக்கப்பட்டன. சிறு வியாபாரிகள் கடைகளை திறந்திருந்தனர். மேலும் பால், மருந்து கடைகளும் திறந்திருந்தன. இந்த முழுஅடைப்பு போராட்டம் இன்றும்(புதன்கிழமை) தொடரும் என்று தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்