2-வது நாளிலும் பல இடங்களில் பிரச்சினை: போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

திருச்சியில் 2-வது நாளான நேற்றும் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டதால் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு போலீஸ் பாதுகாப்புடன் வினியோகிக்கப் பட்டது. சில இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர்.

Update: 2019-01-08 22:45 GMT
திருச்சி,

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 5-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி நகரில் நேற்று முன்தினம் பல ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. இதனால் பூட்டி கிடந்த கடைகளுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். தினமும் 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் குறைந்த அளவிலானவர்களுக்கே வழங்கப்பட்டதால் ரேஷன் கடை ஊழியர் களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. முதல் நாள் ஏமாற்றத்துடன் திரும்பிய குடும்ப அட்டைதாரர்கள் நேற்று காலையிலேயே வந்து ரேஷன் கடைகள் முன் வரிசையில் நின்றனர். வரிசையில் நின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் 200 பேரை எப்படி தேர்ந்தெடுப்பது என தெரியாமல் ரேஷன் கடை பணியாளர்கள் திணறினார் கள். சில கடைகளில் குடும்ப அட்டை எண் அடிப்படையில் வழங்கினார்கள். அப்போது வரிசை எண் விவரத்தை ஏன் முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கவில்லை என காத்து நின்றவர்கள் கேள்வி கேட்டனர். இதனால் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பல ரேஷன் கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு தான் பொங்கல் பரிசு பணம் வழங்கப்பட்டதால் காலையில் பணியாளர்களால் அதனை சரியான முறையில் பிரித்து வழங்க முடியவில்லை. காஜாமலையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. இதனால் நேற்று காலை அந்த கடை முன் 500-க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர். வரிசையில் நின்றவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த கடையில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 900 ஆகும்.

பொன்னகர், அய்யப்பநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பணப்பற்றாக்குறை காரணமாகவும், உணவு இடைவேளை நேரத்திலும் ஊழியர்கள் ரேஷன் கடையை மூடிவிட்டு தாலுகா அலுவலகத்துக்கு சென்றதால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்தவர்கள் பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த கடைகளின் முன் அனைவருக்கும் பொங்கல் பரிசு உண்டு. பதற்றம் அடையவேண்டாம். அமைதியாக முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்