நெல்லையில் தொழிலாளி கொலை: ‘குழந்தை இல்லை என்று கிண்டல் செய்ததால் தீர்த்துக் கட்டினேன்’ கைதான மைத்துனர் வாக்குமூலம்

குழந்தை இல்லை என்று கிண்டல் செய்ததால் தொழிலாளியை தீர்த்துக்கட்டினேன் என்று கைதான மைத்துனர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-01-08 22:00 GMT
நெல்லை,

நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் முத்துராமச்சந்திரன் (வயது 35). பெயிண்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி மாரிசெல்வி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முத்துராமச்சந்திரன் தனது மனைவியிடம் தகராறு செய்து அவரை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரிசெல்வியின் தங்கையான ரேவதி (28) என்பவரை முத்துராமச்சந்திரன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர்கள் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துராமச்சந்திரனை, அவருடைய மைத்துனர் வள்ளி மணிகண்டன் (26) ஓட, ஓட அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற வள்ளி மணிகண்டனை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் வள்ளி மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொலை செய்யப்பட்ட முத்துராமச்சந்திரனுக்கு என்னுடைய மூத்த அக்காளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தோம். ஆனால் அவர் என்னுடைய அக்காளை விரட்டி அனுப்பி விட்டார். நாங்கள் சமாதானம் செய்து 2 பேரையும் சேர்த்து வைக்க முயற்சி எடுத்து வந்தோம். இந்த நிலையில் மற்றொரு அக்காள் ரேவதியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். மேலும் எங்கள் வீட்டின் அருகிலேயே குடியிருந்தும் வந்தார். இதனால் முத்துராமச்சந்திரன் எங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வரத்தொடங்கினார். அப்போது அவர், என்னுடைய மனைவி குழந்தை உண்டாகவில்லை என்று கூறி என்னை அடிக்கடி கேலி, கிண்டல் செய்தார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து, தீர்த்துக் கட்டினேன். இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

இதையடுத்து போலீசார் வள்ளி மணிகண்டனிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். வள்ளி மணிகண்டனுக்கு உதவியாக அவருடைய நண்பர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. போலீசார், கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்