உடுமலை,மடத்துக்குளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்; பஸ்கள் வழக்கம் போல் ஓடின

உடுமலை, மடத்துக்குளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடின.

Update: 2019-01-08 22:30 GMT

உடுமலை,

மத்திய அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி உடுமலையில் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க உடுமலை கிளை தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார். சங்க மாநில அமைப்புச்செயலாளர் என்.சக்திவேல், உடுமலை கிளை செயலாளர் வி.ரங்கசாமி, பொருளாளர் பி.மயில்சாமி மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை செயலாளர் எஸ்.சிக்கந்தர்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உடுமலை தாலுகாவில் அஞ்சல் துறையில் தபால் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் உள்ளனர். நேற்று நடந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் அலுவலக ஊழியர்கள் 3 பேர், தபால் ஊழியர்கள் 2 பேர் ஆகிய 5 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். மற்றவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தலைமைத் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டன.

உடுமலை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச்சேர்ந்த 45 பேர் பணிக்கு வரவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் பணிக்கு வந்திருந்தனர். கிராம உதவியாளர்கள் 58 பேரில் 31 பேர் பணிக்கு வந்திருந்தனர்.

உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உடுமலை கிளை தலைவர் தா.வைரமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆ.அம்சராஜ், உடுமலை வட்டகிளை செயலாளர் எம்.பால சுப்பிரமணியம் உள்பட பலர் பேசினர்.

வட்டார வளர்ச்சித்துறையில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்கள் 25 பேர் உள்பட மொத்தம் 65 ஊழியர்கள் உள்ளனர். இதில் ஊராட்சி செயலாளர்கள் 2 பேர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் 19 பேர் என மொத்தம் 21 பேர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். மீதி 44 பேரும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர்.

உடுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மொத்தம் 101 உள்ளன. இதில் டவுன் பஸ்கள் 58 ஆகும். உடுமலையில் அனைத்து அரசு பஸ்களும் ஓடின. தி.மு.க. தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்களைச்சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் பணிக்கு வரவில்லை என்றும், மற்றவர்கள் பணிக்கு வந்திருந்ததாகவும், அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடுமலை நகராட்சி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நகராட்சி ஊழியர்கள் எப்போதும் போல் பணிக்கு வந்திருந்தனர்.

இதேபோல் மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மடத்துக்குளம் வட்டத்தலைவர் முகமது இசாக் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி உமாபதி ஈஸ்வரன்முன்னிலைவகித்தார். போராட்டம் குறித்து மடத்துக்குளம் வட்டக்கிளை செயலாளர் முருகசாமி விளக்க உரை நிகழ்த்தினார். இதில் சத்துணவு, அங்கன்வாடி, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை, போன்ற அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சாலைப்பணியாளர்கள் சங்க நிர்வாகி சிவக்குமார் நன்றி கூறினார்.மடத்துக்குளத்தில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

மேலும் செய்திகள்