திருப்பூர் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்; கலெக்டர் அறிவுரை

திருப்பூர் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தினார்.

Update: 2019-01-08 22:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் 3–வது காலாண்டு வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

எண்ணெயை பிளாஸ்டிக் கவரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. மேலும், எண்ணெய் பேக்கிங் செய்யும் போது, ஸ்ரிங் கவர் பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக தங்களின் ஒரிஜினல் தரத்தை உறுதி செய்ய (ஹாலோ கிராம்) முத்திரையை அச்சிட்டு விற்பனை செய்துகொள்ளலாம். பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் கவனத்திற்கு, 250 மில்லி லிட்டர் தண்ணீர் பாக்கெட்டுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 20 லிட்டர் கேன்களின் மூடியின் மேல் கேப் சிலீவ் பிளாஸ்டிக் என்பதால் அதனை தவிர்த்து, பி.டி.கேப்பை, லேசர் பிரிண்டினாலான பேக்கிங் தேதி, பேட்ஜ் எண் போட்டு தரத்தை உறுதி செய்து விற்பனை செய்துகொள்ளலாம்.

ஓட்டல் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் கண்டைனர் மற்றும் பிளாஸ்டிக் கோட்டிங் (உட்புறமாக வெள்ளை நிறத்தில் இருப்பது) உள்ள சில்வர் பாயில் கவரில் உணவு பொருளை வைத்து விற்பனை செய்தல் கூடாது. எளிதாக கிழியும் தன்மையுள்ள சில்வர் பாயில் கவர்களை பயன்படுத்தலாம். அதற்கும் மாற்றாக பாத்திரங்கள், டிபன் பாக்ஸ்கள், கொண்டுவந்து உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

மேலும், பாக்குமட்டை தட்டு, வாழை இலை போன்றவற்றில் கட்டி விற்பனை செய்யலாம். உணவு பார்சல் பெற்று செல்ல வரும் போது பாத்திரம், கேரியர் கொண்டு வந்து பெற்று செல்லும் வாடிக்கையாளர்களுக்கு வாங்கும் பொருட்களின் விலையில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளதை வரவேற்கிறேன்.

பேக்கரி விற்பனையாளர்கள் கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், பீங்கான் கப் மற்றும் சாசர் போன்றவற்றை டீ வழங்குவதற்கு பயன்படுத்தலாம். உணவு பொருட்களை சில்வர் தட்டுகள், பாக்குமட்டை தட்டுகள், வாழை இலைகள் மீது வைத்து கொடுக்கலாம். இனிப்பு, கார வகைகள் கண்ணாடி ஜார், கண்ணாடி கூண்டுக்குள் வைத்து விற்பனை செய்துகொள்ள வேண்டும். சாலையோரங்களில் தள்ளுவண்டி உணவு விற்பனையாளர்கள் சுகாதாரமான முறையில் உணவை கொடுக்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சிக்கன்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்தக்கூடாது. மளிகை கடை வியாபாரிகள் பருப்பு மற்றும் தானிய வகைகள் 500 கிராம், அல்லது 100 கிராம் என பிரவுன் பேப்பர் கவர்களில் அடைத்து விற்பனை செய்யலாம்.

இறைச்சி கடை விற்பனையாளர்கள் பேப்பரின் மேல் வாழை இலை வைத்து அல்லது பாக்குமட்டை தட்டினை வைத்து விற்பனை செய்ய வேண்டும். பாத்திரங்களை கொண்டு வந்து இறைச்சி வாங்கும் பொதுமக்களுக்கு கிலோவிற்கு ரூ.10 தள்ளுபடி செய்வதாக இறைச்சி விற்பனையாளர்கள் உறுதியளித்துள்ளதை வரவேற்கிறேன். திருப்பூர் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுடன் இணைந்து உணவு பாதுகாப்பு துறையும் பிளாஸ்டிக் ஒழிப்பு கள ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பல சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் ஒருங்கிணைத்தார்.

மேலும் செய்திகள்