கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-01-08 23:00 GMT
திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமை தாங்கினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், இருக்கும் வேலையை பறிக்கக்கூடாது, தொழிலாளர் சட்டங்களை திருத்தக்கூடாது, பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும், சில்லறை விற்பனை மற்றும் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக்கூடாது, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி தொ.மு.ச. சார்பில் மத்திய சங்க தலைவர் குணசேகரன், பொது செயலாளர் பழனிசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி மணி, சுரேஷ், ஐ.என்.டி.யு.சி. துரைராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனியப்பன் மற்றும் எச்.எம்.எஸ், எல்.எல்.பி. உள்பட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதேபோல் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் இன்று(புதன்கிழமை) காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

மணப்பாறையில் பெரும்பாலான மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள், மணப்பாறையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டு, மின்சார சட்ட திருத்த மசோதா 2018-ஐ கைவிட வேண்டும். மின்சார கட்டணம் உயர இருப்பதை தடுக்க வேண்டும். மின்வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

லால்குடியில் சி.ஐ.டி.யு., ஐக்கிய சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. லால்குடி கோட்ட செயலாளர் பழனியாண்டி தலைமை தாங்கினார். இதில் ஐக்கிய சங்க லால்குடி கோட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க லால்குடி கோட்ட துணைச் செயலாளர் செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள், பாரத மஸ்தூர் சங்க நிர்வாகிகள் நீங்கலாக மற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக காலையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மதியம் ஊர்வலம் நடத்தினர். மாலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் விளக்க கூட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்