திருச்சி, திருவெறும்பூர், துறையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 187 பேர் கைது

திருச்சி, திருவெறும்பூர், துறையூர் பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 187 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-08 23:00 GMT
மலைக்கோட்டை,

மத்திய, மாநில தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மத்திய அரசு சாலை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் சாலைகள் முதல் ஆர்.டி.ஓ. அலுவலகம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி வரை அனைத்தையும், தனியாருக்கு மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் நேற்று காலை தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள் சத்திரம் பஸ் நிலையம் முன்பு திரண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாவட்ட பொதுச்செயலாளர் வீரமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகள் தொடர்பாகவும் கோஷங் களை எழுப்பினர்.

பின்னர் திடீரென சாலையில் வாகனங்களை மறிக்க புறப்பட்டு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மறியலுக்கு முயன்றவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் மொத்தம் 87 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதோடு தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஊர்வலமாக சென்று திருவெறும்பூர் ஸ்டேட் வங்கி எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் தொழிலாளர், வியாபார விரோத போக்கை கண்டித்தும் அனைத்து தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் துறையூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ஆனந்தன், விவசாய சங்க தலைவர் காசிராஜன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்