பண்ருட்டி அருகே பயங்கரம், கள்ளக்காதல் தகராறில் கொள்ளையன் படுகொலை
பண்ருட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் தன்னை தீர்த்துக்கட்ட நினைத்த கொள்ளையனை கூட்டாளியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணங்காட்டு தெருவை சேர்ந்தவர் பக்கிரிமுகமது(வயது 48). இதேபோல் டைவர்சன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜியாவுதீன்(46). நண்பர்களான இவர்கள், கூட்டாக சேர்ந்து வீடு புகுந்து திருடி வந்தனர். இருவர் மீதும், பண்ருட்டி பகுதி போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது. இருவருக்கும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பக்கிரி முகமதுக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் பக்கிரி முகமது, அந்த பெண்ணுடன் பேசாமல் இருந்தார்.
இதற்கிடையே ஜியாவுதீனுக்கும், பக்கிரிமுகமதின் கள்ளக்காதலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஊர்சுற்றி வந்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் பின்னர், ஜியாவுதீன் அந்த பெண்ணுடன் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் கூட்டாளி மீது பக்கிரிமுகமதுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் பக்கரிமுகமதின் கள்ளக்காதலி இறந்து விட்டதாக தெரிகிறது.
இதையறிந்த பக்கிரிமுகமது, எனது கள்ளக்காதலியை நீ தான் கொலை செய்து விட்டாய் என்று கூறி ஜியாவுதீனிடம் தகராறு செய்துள்ளார். இந்த பிரச்சினையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் பக்கிரிமுகமதை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இதில் தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து பக்கிரிமுகமது 3 மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியே வந்தார். அப்போது, தனது கள்ளக்காதலியுடன் பழகிய ஜீயாவுதீனை அவர் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை பக்கிரிமுகமது, ஜியாவுதீன் ஆகிய இருவரும் தனியாக சந்தித்து பேசினர். அப்போது திருட்டு தொழிலில் ஈடுபட்டால் அடிக்கடி ஜெயிலுக்கு போக வேண்டியுள்ளது. எனவே இனி, நாம் இருவரும் சேர்ந்து சாராயம் விற்போம் என்று பக்கிரிமுகமது தெரிவித்தார். இதற்கு ஜியாவுதீன் சம்மதித்தார்.
இதையடுத்து இரவில் பணங்காட்டு தெருவில் உள்ள தர்கா அருகே இருக்கும் மோட்டார் கொட்டகைக்கு சென்று இருவரும் மதுகுடித்தனர். அப்போது ஜியவுதீனிடம் பக்கிரிமுகமது ஏன் என் காதலியுடன் பேசி பழகி, கொலை செய்தாய் என்று கேட்டார்.
இதில் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது பக்கிரிமுகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜியாவுதீனை திடீரென குத்த முயன்றார். இதில் அவரது முகத்தில் கத்திக்குத்து விழுந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஜியாவுதீன், பக்கிரிமுகமதின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த பக்கிரிமுகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் பின்னர் ஜியாவுதீன் ரத்த காயங்களுடன் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் தான் பக்கிரி முகமதை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த பக்கிரி முகமதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜியாவுதீன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.