தீய சக்திகள் வழிநடத்துவதாக சந்தேகம்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுயமாக சிந்தித்து செயல்படுகிறாரா? எச்.ராஜா பேட்டி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுயமாக சிந்தித்து செயல்படுகிறாரா? என்றும், அவரை பிரிவினைவாத தீய சக்திகள் வழிநடத்துவதாக சந்தேகம் உள்ளது என்றும் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

Update: 2019-01-08 23:45 GMT

ஈரோடு,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்று இருந்தார். இப்போது தேர்தல் அறிவித்ததும், அங்கு தி.மு.க. வெற்றி பெற்று, பாராளுமன்ற தேர்தலின் போது தனது சக்தியை காட்டியிருக்க முடியும். ஆனால், தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்றும், ஏன் மற்ற 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவில்லை என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். அவரது கூட்டணி கட்சியை சேர்ந்த டி.ராஜா, முகம் தெரியாத ஒரு நபர் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்கள். தற்போது தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், திருவாரூரில் புயல்பாதிப்பு சீரமைப்பு பணி முடிவடையாததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய வி‌ஷயம் என்ன என்றால், தி.மு.க. தமிழகத்தின் மிக முக்கியமான பெரிய கட்சி. இந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் சுயமாக சிந்தித்து செயல்பட்டு கட்சியை வழிநடத்துகிறாரா? அல்லது பிரிவினைவாத தீய சக்திகள் வழிகாட்டுவதன் பேரில் நடக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், அவர் மரணம் அடைந்த போதும் பிரதமர் மோடி நேரில் வந்து ஆறுதல் கூறினார். பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார். எம்.பி.யாக இல்லாத ஒருவருக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் கூடாது என்ற நடைமுறையை மாற்றி அவர் செயல்படுத்தினார். கருணாநிதியின் மறைவை தேசிய துக்கதினமாக அனுசரித்தார். ஆனால் அதற்கு எல்லாம் தி.மு.க. தலைவராக வந்த மு.க.ஸ்டாலின் ஒரு நன்றி கூட கூறவில்லை. ஆனால், கருணாநிதியின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாத சோனியாவை அருகில் வைத்துக்கொண்டு மோடிக்கு சவால்விட்டு பேசுகிறார்.

கேரளாவில் சபரிமலை பிரச்சினையில் வேண்டுமென்றே கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு செயல்படுகிறது. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்துகிறார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. காரணம் கடந்த 2008–ம் ஆண்டு மசூதிகளில் உள்ள கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உள்ளது. அதை கேரளாவில் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா?. கோட்டயம் அருகே ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் நிர்வாகம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பினை செயல்படுத்த முடியாத கேரள அரசு, அது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை எனவே அதை செயல்படுத்த கால அவகாசம் விதிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டை வேண்டி உள்ளது. ஆனால் சபரிமலை பிரச்சினையில் ஏன் கால அவகாசம் கூடாது என்று கேட்கவில்லை. அதுவும் தீர்ப்பில் காலஅவகாசம் கூறாத நிலையில் அதை செயல்படுத்த நினைப்பது ஏன்?. கிறிஸ்தவர்கள் என்றால் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை. இந்துக்கள் என்றால் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை இல்லையா?.

தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக ரூ.1,500 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பாதிப்படைந்த மூன்றரை லட்சம் வீடுகள் கட்ட பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆவணங்களை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.200 கோடி என மொத்தம் மத்திய அரசு சுமார் 8 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு பல முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். வருகிற 27–ந் தேதி எய்ம்ஸ் மருத்துவனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு வருகிறார்.

இவ்வாறு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

பேட்டியின்போது மாநில பொறுப்பாளர்கள் வக்கீல் என்.பி.பழனிச்சாமி, ஏ.சரவணன், மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன், செயலாளர் ஏ.பி.கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று காலை ஈரோடு வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பார்க்கலாம் என்று சி.எஸ்.ஐ. வளாகத்தை நோக்கி சென்றார். அப்போது அங்கு இரும்பு கதவு மூடப்பட்டு இருந்ததால் வெளியில் இருந்தே பார்த்துவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்