வேலைநிறுத்த போராட்டம்: சேலத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை

2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கி உள்ள நிலையில், சேலத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஆனால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை.

Update: 2019-01-08 23:00 GMT
சேலம், 

அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்த பட்ச சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். இதற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்தப்படி வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இதையொட்டி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் அதிகாலையிலே போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கபட்டன.

சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து வாழப்பாடி, இளம்பிள்ளை, மேச்சேரி, ஓமலூர், இரும்பாலை, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ் இயக்கப்பட்டன. இதேபோல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், மதுரை, கோவை, சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கியதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

சேலத்தில் நேற்று பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோக்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஓடின. காலை நேரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில் பெரும்பாலானவை இயங்காததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு பள்ளிகளுக்கு சென்றனர்.

பழைய பஸ் நிலைய பகுதியில் ஒரு ஆட்டோவில் பயணிகளை, டிரைவர் ஏற்றிச்சென்றார். இதைப்பார்த்து அங்கு வந்த சகஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் பயணிகளை ஏற்றக்கூடாது எனவும், அவர்களை உடனடியாக கீழே இறக்கி விடுமாறும் தெரிவித்தனர். இதன் பேரில் ஆட்டோவில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே பழைய பஸ்நிலையத்தில் உள்ள போஸ் மைதானத்தில் ஆட்டோ டிரைவர்கள், தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வேன், கால்டாக்சி போன்றவை வழக்கம்போல ஓடின. சேலம் டவுன், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட மாநகரத்தின் அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. இதனால் வணிகம் பாதிக்கப்படவில்லை. சேலத்தில் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் வழக்கம் போல் பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி சென்றனர்.

இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின. ஒரு சில பகுதிகளில் மட்டும் ஆட்டோக்கள் ஓடவில்லை.தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்