மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு தரப்பினர் பாதிப்பு
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா குற்றம் சாட்டினார்.
ஊட்டி,
ஊட்டி நகர தி.மு.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
மத்தியில் பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற உடன், பிரதமர் மோடி வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார். ஆனால், இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர்.
நான் 2 முறை மத்திய மந்திரியாக இருந்து உள்ளேன். எனது கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுக்க வேண்டும் என்று வங்கிக்கு சென்று கேட்டபோது, ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவித்தனர். ஆனால், தொழிலதிபர் ராஜசேகர ரெட்டியிடம் இருந்து ரூ.80 கோடி ரொக்கத்தை புதிய ரூ.2 ஆயிரம் கட்டுகளாக வருமானத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமான ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் பேசி வருகிறார். இது சம்பந்தமாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய கணக்கு குழு மற்றும் பாராளுமன்ற நிலைக்குழு அனுமதி வழங்கியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது உண்மை அல்ல. சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், மின்வாரியத்துறை அமைச்சர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. எனவே தான் மத்திய அரசையும், மாநில அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பில்லன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.