சின்னசேலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

சின்னசேலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார். அவரது சாவுக்கு காரணமான ஓட்டுனரை கண்டுபிடித்து கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-08 23:00 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள தகரை தெற்கு காலனி பகுதியை சேர்ந்தவர் கலியன் மகன் குமார்(வயது 34), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் வி.கூட்டுரோடுக்கு புறப்பட்டார். கல்லாநத்தம்-மேல்நாரியப்பனூர் சாலையில் எலவடி தனியார் கிழங்கு ஆலை அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான குமாரின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து சின்னசேலம் போலீசார், குமாரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது உறவினர்கள் குமார் சாவுக்கு காரணமான வாகன ஓட்டுனரை கண்டுபிடித்து கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டுனரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்