தபால் நிலையம்-வங்கிகள் அடைப்பு, வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் தபால் நிலையங்கள், வங்கிகள் அடைக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

Update: 2019-01-08 22:30 GMT
தேனி,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய அளவில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வங்கி சேவை, அரசு அலுவலக பணிகள், தபால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,100 வங்கி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 660 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான வங்கிகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் பணபரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.

இதேபோல் மாவட்டம் முழுவதும் கிராமிய தபால் ஊழியர்கள் நீங்கலாக தபால் துறையில் 122 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 100 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், தேனி தபால் நிலையம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு தபால் நிலையங்களும் அடைக்கப்பட்டு இருந்தது. தபால் துறையின் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

மின்வாரியத்தில் பணியாற்றும் 1,196 ஊழியர்களில் 557 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மின்கட்டணம் வசூல் செய்வது, மின்கட்டணம் கணக்கெடுப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர்களை பொறுத்தவரை, ஊரக வளர்ச்சித்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர்.

ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தம் 412 ஊழியர்களில் 162 பேரும், அங்கன்வாடியில் 1,764 பேரில் 251 பணியாளர்களும், வருவாய்த்துறையில் 485 பேரில் 84 பேரும் வேலைக்கு செல்லவில்லை. இதனால், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்கு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

கல்வித்துறையை பொறுத்தவரை மொத்தம் 6 ஆயிரத்து 308 ஆசிரியர்களில் 33 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். எல்.ஐ.சி. காப்பீடு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பணிகள் முடங்கின. அலுவலகங்களில் காப்பீடு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழகத்தில் 99 சதவீதம் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. கேரள மாநிலத்துக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரள மாநிலத்தில் இருந்தும் பஸ்கள் வரவில்லை. மற்றபடி மாவட்டத்துக்குள்ளும், பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், மின்வாரிய அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகம், தபால் நிலையங்கள் உள்பட அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்