அரக்கோணம் அருகே ரெயில்வே பணிமனையில் ‘திடீர்’ தீ அதிகாரிகள் விசாரணை
அரக்கோணம் அருகே ரெயில்வே ஏ.சி. லோகோ பணிமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே 150 ஆண்டு பழமை வாய்ந்த ரெயில்வே ஏ.சி.லோகோ பணிமனை உள்ளது. இங்கு அலுவலகம், கணினி அறை, லோகோ பணிமனை செயல்பட்டு வருகிறது. ரெயில் என்ஜின் பழுது பார்க்கும் பணி, பராமரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இங்கு 200–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் ரெயில்வே தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்.
காலை 11 மணியளவில் ஏ.சி.லோகோ பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக தீத்தடுப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரெயில்வே பணிமனை அதிகாரிகள் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ½ மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் ரெயில்வே பணிமனையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து தீயணைப்பு அலுவலர் பழனி, ரெயில்வே உயர் அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தீயணைப்பு அலுவலர் பழனி தீ விபத்து குறித்து வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமிநாராயணனுக்கு தகவல் தெரிவித்தார். அதேபோல் தீ விபத்து குறித்து லோகோ பணிமனை அலுவலர்கள் சென்னையில் உள்ள தலைமை அதிகாரிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.