வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். படித்த மாணவி கைது செய்ய போலீசார் நடவடிக்கை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். படித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.;

Update: 2019-01-08 23:30 GMT

வேலூர்,

சென்னை திருநின்றவூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருடைய மகள் வைஷ்ணவி. இவர் கடந்த 2008–ம் ஆண்டு பிளஸ்–2 முடித்துவிட்டு 2008–2009–ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு கவுன்சிலிங் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாணவி வைஷ்ணவி தனது பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் வழங்கி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் அந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவ– மாணவிகளின் சான்றிதழ்களும் சரிபார்ப்பதற்காக சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு சான்றிதழ்களை சரிபார்த்தபோது மாணவி வைஷ்ணவியின் மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. அவருடைய மதிப்பெண் சான்றிதழில் இயற்பியல் பாடத்தில் 183 மதிப்பெண் என்பதை 188–ஆகவும், வேதியியல் பாடத்தில் 160 மதிப்பெண் என்பதை 190–ஆகவும் மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவி வைஷ்ணவி 2012–2013–ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். முடித்து சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இயக்குனரக அலுவலகம் உத்தரவிட்டது.

வைஷ்ணவியுடன் 2012–2013–ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். முடித்தவர்களுக்கு 2014–ம் ஆண்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் வைஷ்ணவிக்கு எம்.பி.பி.எஸ். முடித்ததற்கான சான்றிதழ் வழங்கவில்லை.

மேலும் மாணவி வைஷ்ணவி மீது, அரசு மருத்துவக்கல்லூரி டீன் உஷா சதாசிவம் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வைஷ்ணவி மீது சப்–இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது வைஷ்ணவியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்