கஜா புயல் நிவாரண பணிக்குரிய தொகை வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் திடீர் தர்ணா
கஜா புயல் நிவாரண பணிக்குரிய தொகையை வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் பரமக்குடி தாலுகா வாகனேந்தல், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் குடிநீர் கிடைக்காமல் அவதிஅடைந்து வருகிறோம். தண்ணீருக்காக நாள்தோறும் குடம் ஒன்றுக்கு ரூ.10 செலவழித்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
நிலத்தடி நீரும் கடும் உப்புநீராக மாறிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியவில்லை. ராஜகம்பீரத்தில் இருந்து மோசுகுடி கிராமத்திற்கு வரும் குடிநீரை ஊர்களுக்கும் தினமும் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. சோழந்தூர் ஜமாத் நிர்வாக சபை சார்பில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ஊரில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்காக 2 ஊருணிகள் உள்ளன. தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதால் ஊருணிக்கு வரும் தண்ணீர் வரத்து கால்வாயை இணைத்து ஊருணியில் சேரும் வகையில் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
கீழக்கொடுமலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு 2018–19–ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகை மேலக்கொடுமலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்க மாவட்ட துணை தலைவர் சுந்தராசு தலைமையில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் திரளாக வந்தனர்.
இவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிவாரண பணிகளுக்காக சென்ற தங்களுக்கு இதுவரை அதற்கான பணிக்கொடை தொகை வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக தங்களுக்கு அதற்கான தொகை வழங்க வேண்டும் என்றும் கோரி மனுகொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவ ராவ் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.