இறந்துபோன மருமகளின் சொத்துகளை அபகரிக்க முயற்சி - பா.ம.க. பிரமுகர் மீது கலெக்டரிடம் பெண் புகார்

இறந்துபோன தனது மருமகள் சொத்துகளை அபகரிக்க முயல்வதாக ராசிபுரம் பா.ம.க. பிரமுகர் மீது புதுக்கோட்டையை சேர்ந்த பெண் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.;

Update: 2019-01-07 22:45 GMT
நாமக்கல், 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நச்சாந்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகன் நாகராஜனுக்கும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த அமிர்தகணேசன்-மீனாட்சி தம்பதியரின் மகள் தாரணிக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நாகராஜன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி இறந்து விட்டார். இதன் பிறகு தாரணி பெற்றோர் வீடான ராசிபுரத்திற்கு வந்து விட்டார். தாரணியின் பெற்றோர் முன்னரே இறந்து விட்டனர். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி தாரணி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். ஆனால் எனக்கு கூட தகவல் தெரிவிக்காமல், தாரணியை தகனம் செய்து விட்டனர்.

தாரணி இறப்பு சான்றிதழில் கணவர் பெயர் உள்ள இடத்தில் பா.ம.க. பிரமுகர் ஒருவரின் பெயர் இடம் பெற்று உள்ளது. அவர், தாரணியின் சொத்துகளை அபகரிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவரை கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். இதனால் தான் இறப்பு சான்றிதழில் கணவர் என்ற இடத்தில் அவர் பெயர் உள்ளது.

தாரணி இறப்பில் உள்ள சந்தேகம் குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் காவல் துறையில் புகார் அளித்துள்ளேன். மேலும் பல முறை ராசிபுரம் போலீஸ் நிலையத்தை அணுகியும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.

இதனால் 34 வயதே ஆன எனது மருமகள் தாரணியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. தாரணியின் இறப்பு சான்றிதழில் கணவர் என்ற இடத்தில் தனது பெயரை போட்டு சான்றிதழ் பெற்றுள்ள பா.ம.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்.

மேலும் நாமக்கல் சப்-கலெக்டர் மூலம் தனி விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும். மேலும் பா.ம.க. பிரமுகர் தரப்பில் இருந்து மிரட்டல் வருவதால் எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார். 

மேலும் செய்திகள்