உஜ்வாலா திட்டத்தில் தமிழகத்தில் 28 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு; ஒருங்கிணைப்பாளர் தகவல்

தமிழகம் முழுவதும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 28 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.;

Update: 2019-01-07 23:15 GMT

மதுரை,

நாடு முழுவதும் 5 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்க பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.12,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், வருகிற மார்ச் மாதத்துக்குள் 5 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்னதாகவே அந்த இலக்கை அடைந்து விட்டதால் தற்போது மேலும் 3 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து திட்டத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்ட பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம், கடந்த ஆண்டு முதல் தாழத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டம், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் உள்ளவர்கள், காட்டுப்பகுதியில் குடியிருப்பவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை தோட்டத்தொழிலாளர்கள், தேயிலைத்தோட்ட முன்னாள் தொழிலாளர்கள், ஆற்றங்கரை பகுதிகள், தீவுகளில் வசிப்பவர்கள் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது, இந்த பிரிவுகளில் வராத, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு ரே‌ஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரது ஆதார் கார்டு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் 2 கோடியே 20 ஆயிரம் சமையல் கியாஸ் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 28 லட்சத்து 9 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 23 கோடி வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானமாக கிடைத்துள்ளது. தமிழகத்தில், ஆயிரத்து 495 கியாஸ் வினியோகஸ்தர்களும், புதுச்சேரியில் 27 வினியோகஸ்தர்களும் உள்ளனர். இதுதவிர, தற்போது 299 வினியோகஸ்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய வருபவர்களுக்கு பில் தொகையை விட கூடுதலாக ஒரு பைசா கூட கொடுக்கத்தேவையில்லை. இது குறித்து புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அவர்களது ஏஜென்சி உரிமம் ரத்து செய்யப்படும். இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சவுகான், தங்கவேல், சபிதா நடராஜ், அம்பாபவானி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்