தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று முதல் 2 நாள் முழுஅடைப்பு கர்நாடகத்தில் அரசு பஸ்கள் ஓடாது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்கள் அரசு பஸ்கள் ஓடாது என்று கூறப்படுகிறது. மேலும் முழுஅடைப்பை யொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2019-01-07 22:25 GMT
பெங்களூரு,

நாடாளுமன்றத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்றும்(செவ்வாய்க் கிழமை), நாளையும்(புதன் கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கு கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக 2 நாட்களும் ஊழியர்கள் பணியை புறக்கணிக்க உள்ளனர். இதனால் கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடாது என்று கூறப்படுகிறது.

ஆட்டோக்கள் இயங்கும்

இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 7,000 பஸ்கள் ஓடாது. மாநிலம் முழுவதும் சுமார் 23 ஆயிரம் அரசு பஸ்கள் இயங்காது. அதே நேரத்தில் பெங்களூருவில் சுமார் 12 சங்கங்களை உள்ளடக்கிய பெங்களூரு ஆட்டோ டிரைவர்கள் சங்க கூட்டமைப்பு முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது. அதனால் நகரில் வழக்கம்போல் ஆட்டோக்கள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் வாடகை கார்கள் ஓடாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகள், தபால் அலுவலக ஊழியர்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் திறந்திருந்தாலும், எந்த பணிகளும் நடைபெறாது என்று தெரிகிறது.

கல்வி நிறுவனங்கள்

வணிக நிறுவனங்கள், கடைகள், திரையரங்குகளின் செயல்பாட்டில் எந்த இடையூறும் இருக்காது என்று சொல்லப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. கல்வி நிறுவனங்களும் செயல்படும் என்றே கூறப்படுகிறது.

அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலைமையை பொறுத்து கல்வி நிறுவனங் களுக்கு விடுமுறை விடுவது குறித்து மாவட்ட கலெக்டர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள், மருந்து கடைகள் செயல்படும். மேலும் கர்நாடக அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பங்களை தடுக்கும் பொருட்டு, பெங்களூரு பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள், இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன.

பஸ்களில் பயணம் செய்து பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த முழு அடைப்பால் கர்நாடகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

இதற்கிடையே கர்நாடக தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சசிக்குமார் கூறுகையில், “முழு அடைப்பையொட்டி நாங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. அந்தந்த பகுதிகளில் நிலைமையை ெபாறுத்து, விடுமுறை விடுவது குறித்து பள்ளிகளின் முதல்வர்களே முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

இதற்கிடையே முழு அடைப்பையொட்டி பெரும்பாலான அரசு, தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்புக்கு கர்நாடக தொழில் வர்த்தகசபை, கர்நாடக திரைப்பட வர்த்தகசபை, பெங்களூரு நகர வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தார்மீக ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

போலீஸ் பாதுகாப்பு

முழு அடைப்பையொட்டி கர்நாடகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்