கோவில் சொத்து எனக்கூறி நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பேரணி: கலெக்டரிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தவர்களால் பரபரப்பு

கோவில் சொத்து எனக்கூறி நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பேரணி சென்று, கலெக்டரிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-07 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு குறித்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர் சபையினர் கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து அதனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் தெற்குமடவளாகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கடையினை இழுத்து பூட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வெண்ணெய்மலை, காதப்பாறை, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழு என உருவாக்கி, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கரூர் வெண்ணெய்மலை, காதப்பாறை உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நேற்று போராட்டம் நடத்தினர்.

பின்னர் கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழு சார்பில், ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி தங்களது நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட நபர்கள் பலர் தாந்தோன்றிமலை பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒன்று கூடினர். பின்னர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியபடியே தாந்தோன்றிமலை மெயின்ரோட்டில் பேரணி சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும், பட்டாவை ரத்து செய்யும் முடிவை கைவிடு... என கோஷமிட்டனர்.

இதையறிந்ததும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று இருந்த கலெக்டர் அன்பழகன் எழுந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி போலீசார் கைகளை கோர்த்தபடி பாதுகாப்புக்கு நின்றனர். அப்போது நில உரிமை பாதுகாப்புக்குழுவினர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, நாங்கள் கடன் வாங்கியும், கையில் இருந்த பணத்தை செலவு செய்தும் குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசையில் தான் கரூர் மாவட்ட பகுதியில் வீடு வாங்கினோம். இந்த நிலையில் திடீரென கோவில் நில ஆக்கிரமிப்பு எனக்கூறி பட்டாக்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் வருவாய்துறை இறங்கியிருப்பது வேதனையளிக்கிறது. எனவே இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுக்கு எடுத்துகூறி உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து கரூர் நிலஉரிமை பாதுகாப்புக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் வீட்டுமனை மற்றும் விளைநிலங்களை கோவில் நிலம் என தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றுவது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட வேண்டும். மைனம் இனாம் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கோவில் செயல் அலுவலர்கள் புதிதாக வழக்குகளை பதிவு செய்யும் அதிகாரத்தினை ரத்து செய்ய வேண்டும். தற்போது கோவில் செயலர் அலுவலர்கள் அதிகார வரம்புகளை மீறி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பினை துண்டித்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் இறங்குவது கண்டிக்கத்தக்கது. மேலும் ஆக்கிரமிப்பு என்கிற போர்வையில் உரிமையாளர்களை அகற்றி வீட்டுமனை மற்றும் நிலங்களை கரூரில் கையகப்படுத்துதலை நிறுத்த மாவட்ட கலெக்டர் தடை ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக கரூர் பஸ் நிலையத்தில் பலரை ஒன்று திரட்டி உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்