கடலூர் மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு: பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை
2 பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 15 பேருக்கும் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். இதில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.
இவர் அருகில் உள்ள இட்லிக்கடைக்கு பலகாரம் வாங்க சென்ற போது, அங்கு இட்லிக்கடை உரிமையாளரான செந்தில்குமார் மனைவி லட்சுமி என்ற தனலட்சுமி (வயது32), அவரது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன்(24) உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி தனது லீலை வெளியே தெரியாமல் இருக்க அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று, கட்டாயப்படுத்தி ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தார். தொடர்ந்து ஆனந்தராஜ் அந்த மாணவியை மிரட்டி, தனது நண்பர்களான திட்டக்குடியை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ்(28), மதிவாணன்(23) ஆகியோருக்கும் விருந்தாக்கினார்.
தொடர்ந்து தனலட்சுமி 13 வயது மாணவியை மிரட்டி, அவரது தோழியான 14 வயது மாணவியையும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையாக்கினார். அதன்பிறகு அந்த மாணவிகளை தனலட்சுமி விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று விருத்தாசலத்தை சேர்ந்த அன்பு என்ற செல்வராஜ் (58) மூலம் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.
தொடர்ந்து தனலட்சுமி திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு 2 நாட்கள் மாணவிகளை அனுப்பி வைத்தாள். அதில் அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதேபோல் கலாவும், தனலட்சுமியும் சக புரோக்கர்களும் 2 மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சேகர் மகன் சதீஷ்குமார்(28),
உடையார்பாளையம், இடையாக்குறிச்சி, அரியலூர் மாவட்டம்
2. அவரது மனைவி தமிழரசி(27),
3. ரசூல் மனைவி கலா(48), நாச்சியார்பேட்டை, விருத்தாசலம்
4. செந்தில்குமார் மனைவி லட்சுமி என்ற தனலட்சுமி (32), பெரியார் நகர், திட்டக்குடி
5. மதபோதகர் அருள்தாஸ் (60), பெருமாள்கோவில் தெரு, திட்டக்குடி
6. சண்முகம் மகன் ஸ்ரீதர்(23) காட்டுக்கூனங்குறிச்சி,ஊ.மங்கலம்
7. சாதிக் பாட்ஷா மனைவி பாத்திமா(35), கூட்டுறவு நகர், வளவனூர்
8. ஆறுமுகம் மனைவி மகா என்ற மகாலட்சுமி(20), பண்ருட்டி
9. ராதா என்கிற கிரிஜா(35), சுல்தான்பேட்டை, நெல்லிக்குப்பம்
10. ஷர்மிளாபேகம்(34) விருத்தாசலம்
11. அஞ்சாபுலி மனைவி கவிதா என்ற ராஜலட்சுமி(34), ஆபத்தாரணபுரம், வடலூர்
12. வெங்கடேஷ் மகன் அன்பு என்ற அன்பழகன்(28), அயோத்தியாபட்டணம், சேலம்
13. அவரது மனைவி அமுதா(28),
14. தங்கவேல் மகன் மோகன் என்ற மோகன்ராஜ்(28), பெருமாள்கோவில் தெரு, திட்டக்குடி
15. செல்வம் மகன் மதிவாணன்(23),திட்டக்குடி
16. அன்பு என்ற செல்வராஜ் (58),விருத்தாசலம்
17. டவர் என்ற ஆனந்தராஜ்(24), திருக்கண்டேஸ்வரம் நெல்லிக்குப்பம்
18. பாலசுப்பிரமணியன்(42), புதுப்பேட்டை பாரதிநகர்,விருத்தாசலம்
19. முத்துவேல் மனைவி ராதா என்ற ராதிகா(30), செக்கு மேட்டுத்தெரு, பண்ருட்டி
இவ்வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 4-ந்தேதி நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார். அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமியும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரை மட்டும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 16 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகிற 7-ந்தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து 16 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்கப்பட இருந்ததால் கடலூர் கோர்ட்டு வளாகம் நேற்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 16 பேரும் கடலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் காலை 11.30 மணி அளவில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 16 பேரையும் நீதிபதி லிங்கேஸ்வரன் தனித்தனியாக அழைத்து, அவர்களிடம் திருமணம் ஆகி விட்டதா? அப்படி என்றால் எத்தனை குழந்தைகள் உள்ளது. நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்.
உங்களுக்கு ஏன்? அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடாது. தண்டனை குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், சிலர் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்றும் கூறினர்.
இதை கேட்ட நீதிபதி, உங்களில் பெரும்பாலானோருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் குழந்தைகள் தானே, அவர்களிடம் ஏன்? இவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று கேட்டார்.
தொடர்ந்து தனது தீர்ப்பை மதியம் 1 மணிக்கு அறிவிப்பதாக கூறி விட்டு, அறைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.20 மணிக்கு கோர்ட்டுக்குள் தனது இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து மதியம் 1.30 மணி முதல் 1.50 மணி வரை குற்றவாளிகள் 16 பேருக்கும் அளிக்கப்பட்டுள்ள தண்டனை விவரங்களை நீதிபதி கூறினார்.
தண்டனை குறித்த விவரம் வருமாறு:-
டவர் என்கிற ஆனந்தராஜிக்கு 4 ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சத்து 10 ஆயிரமும், அன்பு என்கிற செல்வராஜிக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், கலாவுக்கு 2 ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் அபராதமும், தனலட்சுமிக்கு 2 ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் அபராதமும், ஸ்ரீதருக்கு 2 ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் அபராதமும், பாத்திமாவுக்கு 2 ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் அபராதமும், மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும், அன்பு என்கிற அன்பழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் அபராதமும், மதபோதகர் அருள்தாசுக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், கிரிஜா, ஷர்மிளா, ராஜலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அமுதாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் ராதா என்கிற ராதிகாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.