கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2019-01-06 22:30 GMT
கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்கள் முக்கிய சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில் பள்ளி விடுமுறை என்பதால் நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அடுத்தபடியாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக உள்ளது.

இந்த நாட்களில் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவு கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலையில் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இந்தநிலையில் தற்போது சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் நேற்று கன்னியாகுமரியில் குவிந்தனர். மேலும், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் கடற்கரையில் திரண்ட அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.

பின்னர், கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையில் அதிகாலை 5 மணியில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 3 மணிநேரம் காத்திருந்து காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்து வந்தனர்.

இதேபோல், பூங்காக்கள், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகிய இடங்களிலும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

மேலும் செய்திகள்