சித்ரகலா பரிஷத் சார்பில் பெங்களூருவில் ஓவிய சந்தை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்
சித்ரகலா பரிஷத் சார்பில் நேற்று பெங்களூருவில் ஓவிய சந்தை நடந்தது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.;
பெங்களூரு,
சித்ரகலா பரிஷத் சார்பில் நேற்று பெங்களூருவில் ஓவிய சந்தை நடந்தது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
ஓவிய சந்தை
பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் ஆண்டுதோறும் ஓவிய சந்தை நடைபெற்று வருகிறது. ‘தேசப்பிதா’ மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை பெருமைப்படுத்தும் வகையில் சித்ரகலா பரிஷத்தின் 16-ம் ஆண்டுக்கான ஓவிய சந்தை நேற்று தொடங்கியது.
இந்த ஓவிய சந்தையை உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கி வைத்தார். பின்னர், அவர் ஓவிய சந்தையில் இடம் பெற்றிருந்த ஓவியங்களை பார்வையிட்டார்.
பல்வேறு வகையான ஓவியங்கள்
இந்த ஓவிய சந்தையில் கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 1,000-க்கும் அதிகமான கலைஞர்கள் தங்களின் ஓவியங்களை பார்வைக்காக வைத்திருந்தனர்.
இதில், மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட தலைவர்கள், அரசியல் தலைவர்களின் வெவ்வேறு வகையான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. கடவுள்களின் படங்கள், இயற்கை காட்சிகள், குடும்ப வாழ்க்கை, கிராம வாழ்க்கை, சிற்பங்கள், பறவைகள், வனவிலங்குகள், வரலாற்று சின்னங்கள், நடனமாடும் பெண்களின் உருவங்கள் என்று பல்வேறு விதமான ஓவியங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் ஓவிய சந்தையில் இருந்தன.
ஓவியங்கள் விற்பனை
ஓவிய சந்தையில் கர்நாடகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தங்களின் மனம் கவர்ந்த சித்திரங்களை (ஓவியங்கள்) வாங்கி சென்றனர். ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஓவிய சந்தையையொட்டி குமரகிருபா ரோட்டில் வின்சர் மேனர் சந்திப்பில் இருந்து சிவானந்தா சர்க்கிள் வரை நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்களில் இயக்கப்பட்டன. ஓவிய சந்தையையொட்டி சித்ரகலா பரிஷத் பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததோடு, சித்ரகலா பரிஷத் முன்பு மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.