வருமானவரி சோதனை: ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலம் ரூ.11 கோடி மதிப்பிலான நகை-பணம் பறிமுதல்
நடிகர்கள் உள்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில், ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு,
கன்னட திரையுலக பிரபலங்கள் வீடுகளில் கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தினர்.
வருமான வரி சோதனை
அதாவது பிரபல நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், ஜெயண்ணா, சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி. ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது சிவராஜ்குமாரின் வீட்டில் இருந்து 2 பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். மேலும் நடிகர் யஷ்சுக்கு ரூ.30 கோடி கடன் இருப்பதும், 30 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சோதனையின் போது வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகின. இது கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
21 இடங்களில்...
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
வருமான வரித்துறையின் விசாரணை பிரிவு அதிகாரிகள் கன்னட திலையுலகை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 3-ந் தேதி சோதனை நடத்தினர். 21 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 5 இடங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனையில் கர்நாடக-கோவா மண்டலத்தை சேர்ந்த சுமார் 180 அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு 3 மாதங்களுக்கு முன்பே தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. திரைப்பட நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் வருமானத்தை மறைத்தது, திரைப்படத்திற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
கணக்கில் காட்டப்படவில்லை
திரையரங்குகளில் வசூலான பணத்தை கணக்கில் காட்டாமல் மறைத்தது மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளது. நடிகர்கள் பெற்ற சம்பளம் கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் , சொத்துகள் மற்றும் தங்க ஆபரணங்களில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆடியோ, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்பட்ட பணமும் கணக்கில் காட்டாமல் வரி ஏய்வு செய்யப்பட்டுள்ளது.
25.3 கிலோ தங்க நகைகள்
சட்டப்படி கணக்கில் காட்டப்படாத 25.3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2.85 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.11 கோடி ஆகும். மேலும் ரூ.109 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.
இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் சரியான விவரங்களை வழங்கவில்லை. இந்த கணக்கில் வராத வருமானம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை நடத்தப்படும்
உரிய ஆவணங்கள் இல்லாமல் திரையரங்குகளிடம் இருந்து பெறப்பட்ட பணம், வேறு நோக்கங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு விவரங்கள் வழங்கப்படும். இந்த வரி ஏய்ப்பு குறித்து முறையாக விரைவாக விசாரணை நடத்தப்படும்.
கன்னட திரையுலகினர், அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் முறையான பதிவேட்டில் எழுதி அவற்றை பராமரிக்க வேண்டும் என்றும் , முறையான வழியில் வரியை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.