உலக நன்மைக்காக நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வேள்வி பூஜை
நெல்லையப்பர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி பூஜை நேற்று நடந்தது.
நெல்லை,
நெல்லையப்பர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி பூஜை நேற்று நடந்தது.
சிறப்பு வேள்வி பூஜை
உலக நன்மைக்காகவும், சமுதாயத்தில் நல்லிணக்கம் ஓங்கி மக்கள் சகோதர உணர்வுடன் வாழவும், நெல்லையப்பர் கோவிலில் நேற்று மகா மிருத்யூஞ்சய மந்திர சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சன்னதி முன்பு கணபதி ஹோமத்துடன் மகா மிருத்யூஞ்சய மந்திரவேள்வி பூஜை நடந்தது. அப்போது கும்ப பூஜையும், யாகசாலை பூஜையும் நடந்தது.
தொடர்ந்து காலை 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த கும்பங்களில் இருந்த புனிதநீரால் நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திரளான பக்தர்கள் தரிசனம்
இந்த சிறப்பு வேள்வி பூஜையில் சாரதா கல்லூரி நிர்வாகி பக்தானந்தா மகாராஜ் சுவாமிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் பக்தர் பேரவையினர் செய்து இருந்தனர்.