பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களக்காடு தலையணையில் ஆயத்த பணிகள் தீவிரம் புலிகள் காப்பக துணை இயக்குனர் தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களக்காடு தலையணையில் அடிப்படை வசதிகளுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-06 22:00 GMT
களக்காடு, 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களக்காடு தலையணையில் அடிப்படை வசதிகளுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறியதாவது,

ஆயத்த பணிகள்

நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு காணும் பொங்கல் வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தலையணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடிப்படை வசதிகள்

வாகன நெரிசல்களை தடுக்க தலையணை பயிற்சி கூடம் அருகே புதிதாக தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர் பூங்கா, அருங்காட்சியகங்களும் நிறுவப்பட்டுள்ளது. அதில் புலி, சிறுத்தை, கரடி, பாம்பு, முயல்கள் ஆகியவற்றின் தத்ரூபமான உருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தலையணைக்கு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளது. கழிப்பறை, குடிநீர் வசதி, கூடுதல் உடை மாற்றும் அறைகள் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வனத்துறை சார்பில், குளிர்பான கடைகளும் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்