அரியலூரில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு

அரியலூரில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2019-01-06 22:45 GMT
அரியலூர்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 74 ஆயிரத்து 684 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா துறைமங்கலத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், மருதராஜா எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் சாந்தா தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.1,000 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். அப்போது விலையில்லா வேட்டி- சேலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட வழங்கல் அதிகாரி அல்லிராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளர் பிரேமா, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ராஜாராம், பொது வினியோக திட்டத்தின் துணைப்பதிவாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 556 ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா அரியலூர் அண்ணா நகரில் உள்ள பொதுவினியோக திட்ட அங்காடியில் நடந்தது. இந்த விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலா ரூ.ஆயிரத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தாசில்தார் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளன் வரவேற்றார். முடிவில் பொதுவினியோக திட்டத்தின் துணைப்பதிவாளர் செல்வராஜ் நன்றி கூறினார். பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்