அங்கன்வாடி பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி பள்ளிகளிலும் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.;
கோவில்பட்டி,
தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி பள்ளிகளிலும் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கோவில்பட்டியில் நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
அங்கன்வாடிகளில்...
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கன்வாடி பள்ளிகளில் 51 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
ஐ.ஏ.எஸ். அகாடமி
32 மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள நூலகங்களிலும் வரும் ஆண்டு முதல் குடிமைப்பணிகள் என்று சொல்லக்கூடிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்க முதல்-அமைச்சர் ஒப்புதல் வழங்கி உள்ளார். அது விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நூலக அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.