திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி வாகைசூடும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.
கோவில்பட்டி,
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி வாகைசூடும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.
தேர்தல் பணி
கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம்மணியாச்சியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். அ.தி.மு.க. தேர்தலை என்றைக்கும் சந்திக்க பயந்த இயக்கம் கிடையாது. களத்தில் வெற்றி வாகை சூட போவது அ.தி.மு.க. தான்.
கனவு முதல்வர்
திருவாரூர் தொகுதியை தங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என பா.ஜனதா அ.தி.மு.க.விடம் கேட்டதாக கூறப்படுவது வெறும் வதந்தி. அதற்கு அடிப்படை ஆதாரம் கிடையாது. ஸ்டாலின் இந்த அரசு கலைந்து விடும் என்று கூறுவது அவருடைய கனவு. இறுதி வரை அவர் கனவு முதல்வராக தான் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.