சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினை: கேரள அரசை கண்டித்து இந்துமக்கள் கட்சியினர் பஸ் மறியல், 17 பேர் கைது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து, கேரள அரசை கண்டித்து உடுமலையில் பஸ் மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை (தமிழகம்) சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இது சபரிமலையின் புனிதத்தை சீர்குலைக்கும் செயல் என்றுகூறி கேரள அரசை கண்டித்து சமீபத்தில் இந்து அமைப்பினர் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் மூணாறில் இருந்து உடுமலைக்கு வந்து செல்லும் கேரள அரசு பஸ் முன்பு இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
இந்து மக்கள் கட்சியினர் பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் நின்றிருந்தனர். இந்த நிலையில் மதியம் 2.45 மணிக்கு கேரள அரசு பஸ் உடுமலைக்கு வந்தது. அந்த பஸ்சை போலீசார் சிறிது தூரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நிறுத்தினர். பின்னர் பஸ் பயணிகள் இறங்கி பஸ் நிலையத்திற்கு நடந்து வந்தனர். அதன் பின்னர் அந்த பஸ் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தது. உடனே இந்து மக்கள் கட்சியினர் பஸ் நிலைய நுழைவு வாயிலில் கேரள பஸ் முன்பு உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமணன் முன்னிலை வகித்தார்.
மாநில விவசாய அணித்தலைவர் சீனி, இந்து மக்கள் கட்சி குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், உடுமலை ஒன்றிய மகளிரணி செயலாளர் சகுந்தலா, மாவட்ட மகளிரணி தலைவர் மலர்க்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேன் மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடுமலையில் இருந்து மூணாறுக்கு புறப்பட்டு சென்ற கேரள பஸ்களுக்கு பாதுகாப்பாக போலீசார் ஒன்பதாறு செக்போஸ்ட் வரை சென்று வந்தனர்.