ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு வேட்டி–சேலை, பொங்கல் பரிசு தொகுப்பு; அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

உடுமலையில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டி, சேலைகள் ரூ.1000–த்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2019-01-06 22:30 GMT

உடுமலை,

பொங்கல் பண்டிகைக்காக வேட்டி சேலைகள், பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவற்றை வழங்கும் தொடக்க விழா உடுமலையில் நடந்தது. இதை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலை, ரூ.1000–த்துடன் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி பருப்பு, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு ஆகியவற்றை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 402 பேருக்கு வேட்டி,சேலையும் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உடுமலை தாலுகாவிற்கு மட்டும் 64 ஆயிரத்து 436 வேட்டிகளும்,சேலைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு அத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 877 ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதில் உடுமலை தாலுகாவில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 707 ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த வேட்டி,சேலை ரூ.1000–த்துடன் பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பு வழங்கும் தொடக்க விழா வருவாய்த்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நேற்று உடுமலை நகராட்சி திருமண மண்டபம் தேஜஸ் மகாலில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி வரவேற்றுப்பேசினார். விழாவில் வேட்டி,சேலை, ரூ.1000–த்துடன் பொங்கல் பரிசு பொருட்கள் ஆகியவற்றை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசினார்.

விழாவில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் த.பிரபு, துணைப்பதிவாளர் (தாராபுரம்), கோவிந்தன், மாவட்ட பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் நர்மதா, உடுமலை ஆர்.டி.ஓ.அசோகன், தாசில்தார் தங்கவேல், குடிமைப்பொருள் தனிதாசில்தார் தயானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்