ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-06 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் சர்ச் காம்பவுண்ட் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஈரோடு மாநகராட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டு ஈரோடு பவானி ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் எங்களுடைய அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் கூறும்போது, ‘மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உங்களுடைய போராட்டத்தை கைவிட்டு விட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈரோடு பவானி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்