வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை: மலைக்கிராம மக்களிடம் கலெக்டர் கருத்து கேட்பு

வனப்பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதையடுத்து மலைக்கிராம மக்களிடம் கலெக்டர் கருத்து கேட்டார்.

Update: 2019-01-05 23:49 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வெள்ளிமலை, காந்திகிராமம், அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் மலைக்கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை மாற்று இடத்தில் செய்து தர முன்வந்தது.

மலைக்கிராம மக்கள் வனப்பகுதியில் பீன்ஸ் உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற அச்சத்தில் வனத்துறையினரின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அரசரடி, பொம்மராஜபுரம் ஆகிய கிராமங் களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது மேகமலை வனஉயிரின காப்பாளர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், வனச்சரகர்கள் குமரேசன், கணேசன், இக்பால் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அரசரடி கிராமத்திற்கு சென்ற கலெக்டர் மலைக் கிராம மக்களின் வீடு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் கிராமத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்தால் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது சிலர் வனப்பகுதியில் இருந்து வெளியேற போவதில்லை என தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மலைக்கிராமங்களில் மின்சாரம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்குள்ள குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் கிராம மக்கள் ஒன்று கூடி கலந்து ஆலோசனை செய்து இந்த பிரச்சினை குறித்து உரிய முடிவு எடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தை தொடர்ந்து பொம்மராஜபுரம் கிராமத்திலும் மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்