உத்தமபாளையம் அருகே மயானத்தில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உத்தமபாளையம் அருகே மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கலெக்டர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-01-05 23:47 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி பகுதியான கருவேலம்பட்டி மயானத்தில் மர்மநபர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கிவைத்து இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் பல்லவி பல்தேவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், வருவாய்த்துறை பறக்கும்படை துணை தாசில்தார் ஜாகீர்உசேன், வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணி, ஜாசித் ஆகியோர் கருவேலம்பட்டி மயானத்திற்கு சென்றனர். அங்கு மயானத்தில் 43 மூட்டைகளில் 2,150 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து டிராக்டர் மூலம் உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி மூட்டைகளை பதுக்கிவைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள ரேஷன்கடைகளுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு வினியோகம் செய்ய அனுப்பப்படும் அரிசிமூட்டைகள் ரேஷன்கடை ஊழியர்கள் உதவியுடன் வியாபாரிகளுக்கு கடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையாக அரிசி வினியோகம் செய்யப்படுவது இல்லை. அரிசி கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் கூறினாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால்தான் கலெக்டரிடம் புகார் செய்தோம். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு உத்தமபாளையம் புதூர் பகுதியில் ரேஷன்கடை ஊழியர் உதவியுடன் 2 டன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்துவது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து உத்தமபாளையம் சப்-கலெக்டர் கூறுகையில், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் அரிசி கடை ஊழியர்கள் உதவியுடன் கடத்தி செல்லப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்