தியாகதுருகம், மயிலத்தில் 420 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தியாகதுருகம் மற்றும் மயிலத்தில் 420 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-01-05 22:49 GMT
கண்டாச்சிமங்கலம்,

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு கடந்த 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்டறிய தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமையில் இளநிலை உதவியாளர்கள் கொளஞ்சியப்பன், செந்தில் குமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ், கணினி உதவியாளர் முத்துக் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று தியாகதுருகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வாரச்சந்தையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 400 கிலோ பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கப்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகளை வைத்துள்ள கடைக்காரர்கள் அவற்றை தாங்களாகவே பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி கடை வீதியில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன், இளநிலை உதவியாளர் கலியமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.

இதில் குறைந்த அளவிலேயே பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது பேரூராட்சி மேற்பார்வையாளர்கள் தண்டபாணி, ராமலிங்கம், பரப்புரையாளர்கள் ஜெயா, உமாதேவி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

மயிலம்

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், கிராம ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மந்தம் ஆகியோர் தலைமையில் ஊராட்சி செயலாளர்கள் சங்கர், விநாயகம், செல்வம், சிவக்குமார், நடராஜ் ஆகியோர் மயிலம், ரெட்டணை, கூட்டேரிப்பட்டு, தீவனூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 20 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்