சேலத்தில் நள்ளிரவில் பட்டு நூல் ஆலையில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
சேலத்தில் நள்ளிரவில், பட்டு நூல் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அங்குஷ். இவர் சேலம் சன்னியாசிகுண்டு அடிவாரம் பகுதியில் பட்டு நூல் மற்றும் ஜரிகை தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலை கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு பட்டு நூல்கள், ஜரிகைகள் பண்டல், பண்டல்களாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் விலை உயர்ந்த எந்திரங்களும் உள்ளன.
இந்த நிலையில் பட்டு நூல் ஆலையில் இருந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் தீ மள,மளவென பிடித்து எரிந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சேலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் நிலைய அலுவலர் சிராஜ் அல்வனிஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். தீ பயங்கரமாக எரிந்ததை பார்த்த அவர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பட்டு நூல் என்பதால் தீ வேகமாக பரவி வந்தது. இதைத்தொடர்ந்து சூரமங்கலம், வாழப்பாடி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
பின்னர் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள். இது தவிர போலீசாரின் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டு, அதில் இருந்தும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும் தீயை கட்டுப்படுத்தப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர். எனினும் தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள குடியிருப்புக்குள் தீ பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அங்கிருந்த எந்திரங்கள் சில வெடிக்கும் சத்தம் கேட்டது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன. தீ விபத்து ஏற்பட்ட ஆலை அமைந்துள்ள இடம் குறுகலான பகுதி என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்தில் எந்திரங்கள் உள்பட பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து கிச்சிபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.