ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ‘திடீர்’ பணியிடை நீக்கம் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்
ஆம்பூரில் நகராட்சி ஆணையாளர் ‘திடீர்’ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் கூறப்படுகின்றன.
ஆம்பூர்,
ஆம்பூர் நகராட்சி ஆணையாளராக சோ.பார்த்தசாரதி பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றதில் இருந்து முகநூல் கணக்கு தொடங்கி அதன் மூலம் நகராட்சிக்கு புகார் அனுப்பலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பப்படும் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து வந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் ஆணையாளர் பார்த்தசாரதியை நகராட்சி நிர்வாக ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆணை நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் பரிந்துரையின் பேரில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆணையாளர் பார்த்தசாரதியின், பணிநீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி கடந்த வாரம் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊர் சென்றுள்ளார். இதற்கான விடுப்பு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளிடம் விடுப்பு எடுப்பதற்கான அனுமதி பெறவில்லையாம்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி வேலூர் மண்டலத்தை சேர்ந்த வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி ஆணையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். விடுப்பு எடுத்தது குறித்து அவரிடம் மண்டல இயக்குனர் விளக்கம் கேட்டுள்ளார்.
அப்போது மண்டல இயக்குனருக்கும், நகராட்சி ஆணையாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தி அடைந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆணையாளர் பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, “ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஒழுங்கின்மை மற்றும் கீழ்படிந்து நடக்காதது என்ற குற்றச்சாட்டு காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றனர். ஆம்பூர் நகராட்சிக்கு சில வருடங்களுக்கு பிறகுதான் ஆணையாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகள் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆணையாளர் பார்த்தசாரதி, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.