அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைப்பு

பேரணாம்பட்டு அருகே அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்துக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2019-01-05 22:00 GMT
பேரணாம்பட்டு, 

பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 61). இவர் அருகில் உள்ள ஓணாங்குட்டை கிராமத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அரசு அனுமதியின்றி குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்தார். இது குறித்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வந்த புகாரின்பேரில் காப்பகத்துக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் ஞானபிரகாசம் அரசு அனுமதி பெறாமல் மீண்டும் இந்த குழந்தைகள் காப்பகத்தை திறந்து நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தங்க வைத்து அவர்களை ஒழுங்காக பராமரிக்காமல், குளிக்க வைக்காமல் தனது நிலத்தில் புல், பூண்டுகளை வெட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளார்.

மேலும் மாடுகளை மேய்த்து வரும்படி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இவர்களது பெயரில் பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து 2 அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருவதாகவும் கலெக்டருக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்திக்கு அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். அதன்பேரில் நிஷாந்தி தலைமையில் குழந்தைகள் காப்பக அலுவலர் சங்கீதா நேற்று அதிரடியாக காப்பகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தி, ஞானபிரகாசிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அங்கு 15 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது. ஞானபிரகாஷ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அப்போது அங்குவந்த பொதுமக்கள், குழந்தைகளை கொடுமைபடுத்துவதாக புகார் அளித்தனர். பின்னர் அங்கிருந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, காப்பகத்திற்கு பேரணாம்பட்டு தாசில்தார் கோட்டீஸ்வரன் சீல் வைத்தார். மேலும் ஞானப்பிரகாசம் மீது உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்