பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பின் தையல் தொழிலாளி சிக்கியது எப்படி?

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தையல் தொழிலாளி போலீசில் சிக்கியது எப்படி? என்பது குறித்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று கூறினார்.

Update: 2019-01-05 23:00 GMT
பெங்களூரு, 

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தையல் தொழிலாளி போலீசில் சிக்கியது எப்படி? என்பது குறித்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று கூறினார்.

6 ஆண்டுகளுக்கு பின் கைது

பெங்களூரு கே.ஜி.நகரில் வசித்து வருபவர் நாகராஜூ. தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி மானஷா (வயது 28). கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்த மானஷாவை மர்மநபர்கள் கழுத்ைத இறுக்கி கொலை செய்துவிட்டு 400 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கே.ஜி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், போலீசாருக்கு கொலையாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மானஷாவை கொலை செய்ததாக தையல் தொழிலாளி ராகவேந்திரா (35) என்பவரை 6 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.

அண்ணாமலை பேட்டி

கைதான ராகவேந்திரா போலீசில் சிக்கியது எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிறை கைதிகளிடம் கூறியதால் சிக்கினார்

மானஷா கொலை வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின் ராகவேந்திராவை கைது செய்து உள்ளோம். மானஷா வழக்கில் துப்பு கிடைக்காத நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த கொலை வழக்கில் ராகவேந்திராவை ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் வைத்து சக கைதிகளிடம் மானஷா கொலை குறித்தும், அந்த வழக்கில் அவர் போலீசில் சிக்காதது பற்றியும் தெரிவித்தார். இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகள் வழியாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இதற்கிடையே, ராகவேந்திரா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து, ராகவேந்திராவை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் 3 மாதம் தொடர்ந்து கண்காணித்து முக்கிய தகவல்களை சேகரித்து ராகவேந்திராவை கைது செய்தனர். ராகவேந்திராவிடம் விசாரித்தபோது மானஷாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். ராகவேந்திராவுடன் சேர்ந்து மானஷாவை கொலை செய்த அவருடைய கூட்டாளி விஜய் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி இறந்து விட்டார். கைதான ராகவேந்திராவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டீ குடித்துவிட்டு கொலை செய்தனர்

முன்னதாக கொலை நடந்த நாளில் மானஷாவின் வீட்டுக்கு ராகவேந்திரா தனது கூட்டாளியுடன் சென்றார். தையல் தொழிலாளியான ராகவேந்திராவுக்கும், மானஷாவுக்கும் பழக்கம் இருந்தது. இதனால் ராகவேந்திரா உள்பட 2 பேருக்கும் மானஷா டீ போட்டு கொடுத்ததும், டீயை குடித்துவிட்டு அவர்கள் 2 பேரும் சேர்ந்து மானஷாவின் கழுத்தை செல்போன் ‘சார்ஜர்’ வயரால் இறுக்கி கொலை செய்ததும், பின்னர் நகைகளை கொள்ளையடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்