பிரசாதம் சாப்பிட்டு 17 பேர் பலி: 20 நாட்களாக மூடிகிடக்கும் மாரம்மா கோவில் நடையை திறக்க கோரி பக்தர்கள் கண்ணீர் வேண்டுதல்
20 நாட்களாக மூடிகிடக்கும் மாரம்மா கோவில் பிரசாதம் சாப்பிட்டு 17 பேர் பலியானதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக மாரம்மா கோவில் மூடியே கிடக்கிறது.
பெங்களூரு,
பிரசாதம் சாப்பிட்டு 17 பேர் பலியானதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக மாரம்மா கோவில் மூடியே கிடக்கிறது. இதனால் கோவில் நடையை திறக்க கோரி பக்தர்கள் கண்ணீருடன் வேண்டி வருகிறார்கள்.
17 பக்தர்கள் பலி
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிச்சுகுத்தி மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி நடந்தது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இந்த பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 17 ேபர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் சிலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் பூச்சிகொல்லி மருந்து (விஷம்) கலக்கப்பட்டது தெரியவந்தது. கோவில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் கோவில் நிர்வாகிகளுக்கும், சாளூர் இளைய மடாதிபதி மகாதேவசாமிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் பக்தர்களுக்கு வழங்கிய பிரசாதத்தில் விஷம் கலந்தது தெரியவந்தது.
கோவில் நடை மூடல்
இதைதொடர்ந்து இளைய மடாதிபதி மகாதேவசாமி, அவரது கள்ளக்காதலி அம்பிகா, இவரது கணவர் மாதேஷ், தொட்டய்யா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாரம்மா கோவில் நிர்வாகத்தை, கர்நாடக அரசு கைப்பற்றியது. இதற்கிடையே சாளூர் மடத்தில் இருந்து மகாதேவசாமி நீக்கப்பட்டார்.
இ்ந்த சம்பவத்துக்கு பிறகு கோவில் நடை மூடப்பட்டது. கடந்த 20 நாட்கள் ஆகியும் இதுவரை அந்த கோவில் திறக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாரம்மாவை தரிசனம் செய்ய முடியாமல் கோவில் வாசல் முன்பாக தீபம், கற்பூரம் ஏற்றி வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
கண்ணீர் வேண்டுதல்
நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த ஒரு பெண் பக்தர், கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து சிலர் உனக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி விட்டனர் தாயே, அவர்கள் பிரசாதத்தில் விஷம் கலப்பதற்கு முன்னதாக அதை நீ தடுத்திருக்கலாம் தாயே என கண்ணீர் விட்டு கதறியபடி மாரம்மா கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டார். கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் இவ்வாறு வேண்டுதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோவில் நடையை திறக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் அம்மனிடம் கண்ணீருடன் வேண்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை மந்திரி பரமேஸ்வர் நாயக், மாரம்மா கோவிலுக்கு சென்று சம்பவம் பற்றி கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாரம்மா கோவிலை கர்நாடக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பத்திரம், ஆவணங்களை கலெக்டர் கர்நாடக அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விவகாரம் பற்றி முதல்-மந்்திரி தலைமையில் நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் பேசி, அந்த கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியதுள்ளது. அதன் பின்னர் கோவில் நடை திறக்கப்படும் என்றார்.